இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை, தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பாண்ட் வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது.
மேலும் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும், லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம், வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகாவித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பலவண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது.
