;
Athirady Tamil News

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் தனியாகப் செல்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து ; பெண்களே அவதானம்

0

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் பிரயாணிகளை இலக்கு வைத்து, மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து கிழக்கு மாகாணப் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

மயக்க மருந்து
கொள்ளையர்கள் சாதாரண பயணிகள் போல வேடமிட்டு, பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் நபர்களிடம் சென்று பேச்சுக்கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். பேச்சுவார்த்தையின் இடையே, தங்களின் பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்குக் கொடுத்துச் சாப்பிட வற்புறுத்துகின்றனர்.

அந்த பிஸ்கட்டுகளில் வீரியமிக்க மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும். பிஸ்கட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் செல்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் (சங்கிலி, மோதிரம், காப்பு) மற்றும் கைப்பையில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பேருந்திலிருந்து தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பயணிகள் சுமார் 3 நாட்களுக்குப் பின்னரே சுயநினைவுக்கு வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை தொடர்கிறது. அண்மைக்காலமாக இவ்வாறான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

பொதுமக்கள் குறிப்பாகத் தனியாகப் பயணிக்கும் பயணிகள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.பேருந்துகளிலோ அல்லது பொது இடங்களிலோ அறிமுகம் இல்லாதவர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள், பிஸ்கட், குளிர்பானங்கள் அல்லது எந்தவொரு பொருளையும் பெற்றுக்கொள்ளவோ அல்லது சாப்பிடவோ வேண்டாம்.

நீண்ட தூரப் பயணங்களின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கவும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கவும்.

தங்கள் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.