;
Athirady Tamil News

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த   பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்-  வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன்

0

நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார்.

வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் சாய்ந்தமருது வொலிவேரியன் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்திற்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் வழங்கும் நிகழ்வு இன்று (28) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிழ்கவில் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபிதா மற்றும் உறுப்பினர் ஆசிரியை ஏ. எம். அஸ்மினா உள்ளிட்ட பாடசாலை பிரதி அதிபர் எம். ஆர். றினுபா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் பதிவாகும் மரணங்களில் சுமார் 83% சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்ற புள்ளிவிபரங்கள் தற்போதைய நிலைமைக்கான தீவிரத்தைக் காட்டுகின்றன.

உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்களும் மக்களை தொற்றா நோய்களின் பாதிப்புக்குள் தள்ளிவருகின்றன என சுட்டிக்காட்டினார். இதனால் நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

குறிப்பாக பெண்களை இத்தகைய தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க விசேட செயல் திட்டங்கள் அவசியமாகும் எனக் கூறிய அவர், ஒவ்வொரு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பெண்களுக்கான பிரத்தியேக உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இளவயது மரணங்களை கட்டுப்படுத்துவதில் பாடசாலைகளும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு கல்வி முறையாக வழங்கப்பட வேண்டும், பாடசாலை மட்டத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும், பாடசாலை வளாகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்,

இவ்வாறான நடவடிக்கைகள் சிறு வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவுவதோடு, எதிர்காலத்தில் தொற்றா நோய்களின் தாக்கத்தை குறைக்க பெரிதும் துணைபுரியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நுகர்வோர் அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் திடீர் பரிசோதனைகள் பாராட்டத்தக்கவை என்றும், அவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளவயது மரணங்களை குறைக்கும் நோக்கில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக அமைப்புகள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்த விரிவான தேசிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.