வவுனியாவில் கடத்தி தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸாரின் பிடியில் மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள்
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 முச்சக்கரவண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள்
வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வயல் நிலப் பகுதியில் மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தின் போது அவரிடம் இருந்து கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறப்பட்டிருந்ததுடன், அவரது தொலைபேசியில் இருந்த ஆவணங்களும் அழிக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்துள்ளனர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.