;
Athirady Tamil News

நீதிபதி இடமாற்றம் – அரசியல் தலையீடு

0
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 
 
நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் உள்ளதாவது,

யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக எங்களது முழுமையான அதிர்ச்சியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதற்காக இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

அலெக்ஸ் ராஜா கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் (2026.05.31 முதல் நடைமுறைக்குவரும் வகையில்) அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, அந்த இடமாற்றத்துக்குப் பின்னால் புறக்காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எங்களது உறுப்பினர்களிடமிருந்து நம்பகமான தகவல்களின் அடிப்படையில், வட மாகாண ஆளுநருக்கு எதிராக நீதிபதி சில உத்தரவுகளை வழங்கியிருந்தமையே இந்த இடமாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அறிகிறோம். 
 
அந்த வழக்குகளில் ஆளுநர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார். (அந்த உத்தரவுகள் பின்னர் இரத்து செய்யப்பட்டதுடன், அவை நீட்டிக்கப்படவும் இல்லை.)
 
 மேலும், வடக்கு ஆளுநர் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட சில அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தலையீட்டை நாடினார் என்றும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளோம்.

நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
 
 எனினும், நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்வார்கள்.

நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றதாக சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும். நாட்டின் தலைவராக, இத்தகைய தலையீடுகளுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு உங்களுக்குள்ளது.

இந்த விடயத்தை மிக உயர்ந்த முன்னுரிமையுடன் விசாரிக்குமாறு வலியுறுத்துகிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நேரில் விளக்குவதற்காக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றோம் – என்றுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.