;
Athirady Tamil News

8ஆம் தரத்திலேயே தயாராகி O/L இல் சாதித்த 14 வயது மாணவன்

0

இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறையை முறியடித்து, 14 வயது மாணவன் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

காலி லபுதுவ சிறிதம்ம வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் அய்யாஷ் அஹமட் என்ற மாணவனே இந்த அரிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தனிப்பட்ட விண்ணப்பதாரராக (Private Candidate) தோற்றிய அவர், 8 “A” சித்திகளையும் ஒரு “B” சித்தியையும் பெற்று அசத்தலான பெறுபேற்றை பெற்றுள்ளார்.

இலங்கையின் வழமையான கல்வி முறையின்படி, 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவர்களே சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவது வழக்கமாகும்.

எனினும், தனது முயற்சி மற்றும் மன உறுதியின் மூலம் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் போதே 10 மற்றும் 11ஆம் தரங்களுக்குரிய முழுப் பாடத்திட்டங்களையும் ஒரே வருடத்திற்குள் சுயமாகக் கற்றுத் தேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையின் மூலம் குறைந்த வயதில் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களில் ஒருவராக அய்யாஷ் அஹமட் இடம்பிடித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிறந்த விமானப் பொறியியலாளராகி (Aircraft Engineer) நாட்டுக்குச் சேவை செய்வதே தனது இலட்சியம் என இந்த இளம் சாதனையாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.