மீண்டும் உயரும் முட்டை விலை! புதிய விலை நாளை முதல் நடைமுறையில்
முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு
குளியாப்பிட்டியில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த விலை உயர்வை அறிவித்துள்ளார்.
முட்டை விலை உயர்வுக்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார்.
கோழித் தீவனத்திற்கு தேவையான சோளத்தின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தியாகும் சோளம் தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடும் நஷ்டம்
மேலும், அரிசி உள்ளிட்ட மாற்று தீவனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் கோழிகளின் உடல்நலமும் செரிமானமும் பாதிக்கப்பட்டு, முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
சில வர்த்தகர்கள் விலங்கு தீவனங்களில் இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் அறிந்திருந்தாலும், இதுவரை பயனுள்ள தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.