;
Athirady Tamil News

சீனா: ரூபிக்ஸ் கியூப்பில் சாதனை படைத்த 6 வயது சிறுமி!

0

பெய்ஜிங்,

பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் பிரிவில், சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், புதிய உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த கியூபிங் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக கியூப் சங்கம் நடத்திய அதிகாரப்பூர்வ போட்டியில், ஐந்து முறை ரூபிக்ஸ் கியூப்பைத் தீர்த்ததில் அவரது ஒட்டுமொத்த சராசரி நேரம் 4.27 வினாடிகளாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கான உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

3 நாட்களில் 2 முறை சாதனை

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரைச் சேர்ந்தவர் லியான் யுன்சி (வயது 6). இவர் கடந்த ஓராண்டாக, தினமும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை ரூபிக்ஸ் கியூப் யுக்திகளை தீவிரமாக பயிற்சி செய்து வந்தார். இந்த நிலையில் உலக கியூப் சங்கம் கடந்த 12-ந்தேதி அன்று சீனாவின் வுஹான் நகரத்தில் பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் போட்டி நடத்தப்பட்டது.

அந்த போட்டியில் கலந்து கொண்ட லியான் யுன்சி 4.52 வினாடிகள் சராசரி நேரத்தில் கியூப்பைத் தீர்த்து முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி குவாங்சோ நகரில் நடைபெற்ற போட்டியிலும் கலந்து கொண்ட யுன்சி 4.27 வினாடிகள் என்ற புதிய நேரத்தைக் குறித்து, தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து, மீண்டும் உலக சாதனையை நிலைநாட்டினார்.

விரல் நுனியில் 1,300 உத்திகள்

உலகிலேயே ரூபிக்ஸ் கியூப்பை 4.5 வினாடிகளுக்கும் குறைவான சராசரி நேரத்தில் தீர்த்த முதல் பெண் கியூபர் என்ற பெருமையை லியான் யுன்சி பெற்றுள்ளார். தனது விரல் வேகத்தின் மூலமும், 1,300-க்கும் மேற்பட்ட கியூப் தீர்க்கும் உத்திகளை நினைவில் வைத்திருப்பதன் மூலமும் இந்த சாதனையை மிக இளம் வயதிலேயே அவர் சாத்தியமாக்கியுள்ளார்.

இந்த சிறுமிக்கு முன்பாக, பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் உலக சாதனை (4.62 வினாடிகள்) சீனாவின் வாங் ஹாங்மிங் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. லியான் யுன்சியின் இந்த அசாத்திய திறமைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.