பிரான்சில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை ; இழப்பீடு வழங்க வேண்டும் என மக்ரோன் அறிவிப்பு
பிரான்சின் பல்வேறு நகரங்களிலும் கடல் கடந்த ஆளுகைப் பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்துள்ள அந்நாட்டு அரசியல் தலைவர் இம்மானுவல் மகிறோன், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களும் வணிக நிலையங்களைச் சூறையாடியவர்களும் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்களில், லிமோஜ் நகர சபைக் கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், லியோன் நகரில் சுற்றுலா அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், மார்சே நகர சபைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்டோ நகரில் காவல் அதிகாரிகளுடன் தொடர்புடைய கட்டடம் தாக்கப்பட்டு பெருமளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்தச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் துணைப் பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்துள்ள அவர், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளையும் வன்முறையில் ஈடுபடுவோரின் செயல்களையும் ஒன்றாகக் கருதக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்ட அவர், வன்முறை, சூறையாடல் மற்றும் பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகளும் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் கொண்டுள்ள கவலைகள் நியாயமானவை எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து தீர்வுகளை முன்வைப்பதற்கான தளம் ஒன்று கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அந்தத் தளத்தின் ஊடாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்க அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நகரங்கள், வணிக நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் மேயர்களும் இணைந்து செயல்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமைதியைக் குலைக்கும் வன்முறைச் செயல்களை அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தெளிவாகக் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.