அரசாங்கத்திற்கு எதிராக சாபகவிகளை பாடி, முழுமையான நகைச்சுவையாளர்களாக எதிர்க்கட்சியினர் மாறியுள்ளனர் என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
விஹாரமகாதேவி பூங்காவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நேற்றைய தினம் அங்கு நடைபெற்ற ‘வஸ்கவிகிய’ (சாபக்கவி) எதிர்க்கட்சியினரின் அவலத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
அரசாங்கத்துடன் நேருக்கு நேர் மோதவேண்டிய எதிர்க்கட்சி இவ்வாறான செயலில் இறங்கியுள்ளது
தற்போதைய நிலையில் அரசாங்கத்தால் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்க இயலவில்லை.
அதுபோல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மிக மோசமான சட்டத்தை கொண்டுவந்து மக்களை அடக்கி ஒடுக்க பார்க்கின்றனர்.
இவ்வாறான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பாரம்பரிய கட்சிகள் என கூறும் எதிர்க்கட்சியினர் விஹாரமகாதேவி பூங்காவிற்குச் சென்று சாபக்கவிகளைப் பாடி வருகின்றனர்
இது ஒரு பெரிய நகைச்சுவையாகும். எதிர்க்கட்சியினர் முழுமையான நகைச்சுவையாளர்களாக மாறியுள்ளனர்
ஞானசார தேரரின் பிரச்சினையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி போராட முயல்கிறது. மறுபுறம் ராஜபக்ச தரப்பு தனது சொந்த அரசியல் சுயலாபத்திற்காகத் தேசியவாதத்தை முன்னிறுத்திப் போராடுகிறது. இதன் மூலம் இரு தரப்பினரும் அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதில்லை.
ஆகவே ஜனாதிபதி, ஜனநாயக ரீதியாக மக்களைப் பாதுகாக்காமல் எதிர்க்கட்சியைக் கண்டு அஞ்ச தேவையில்லை.
அதேவேளை மக்களின் உண்மையான பிரச்சினைகளான பொருட்களின் விலை உயர்வு, வரிச் சுமை, பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அவசியமான பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.என தெரிவித்தார்.