வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு
சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா நேரடியாகச் சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (21) விஜயம் செய்து நிலமையைப் பார்வையிட்டார்.
வயல்வெளியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த யானையின் தீவிர நிலையைக் நேரில் அவதானித்த அவர், உடனடியாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்.
வனவிலங்கு மருத்துவக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, யானையின் உடல்நிலையைப் பரிசோதித்து அதற்குத் தேவையான அவசர மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும், அதைப் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் கடுமையாக வலியுறுத்தினார். இந்தத் திடீர் கள விஜயத்தின் போது, சம்மாந்துறை கிராம சேவகர் ஜீ. சாஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் உடனிருந்தனர்.
குறித்த யானை எந்தக் காரணத்தினால் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைக்குள்ளானது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. யானை நோய்வாய்ப்பட்டதா அல்லது மனித-யானை மோதல் போன்ற ஏதேனும் அசம்பாவிதங்களால் காயமடைந்ததா அல்லது குப்பைகளை உண்டதால் ஏற்பட்ட உடலியல் கோளாறா என்பது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் விரிவான பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
