2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை பெற்றவர்களுக்கே பா.ஜ.க.வில் ‘சீட்’- பிரதமர் மோடி முடிவு!!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக இந்தமுறை எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா என்ற பெயரில் கூட்டணி ஏற்படுத்தி உள்ளன. இதை முறியடிக்கும் வகையில் பா.ஜனதா தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. தேர்தலை சந்திப்பது எப்படி? தொகுதி வாரியாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டு உள்ளன? இன்னும் தேவையான பணிகள் என்ன என்பது பற்றி அறிய பிரதமர் மோடி இன்று முதல் 10 நாட்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்களையும் மற்றும் மத்திய மந்திரிகளையும் சந்திக்கிறார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு சீட் கொடுப்பது? அதற்கான தகுதிகளை ஆராய்வது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த முறை மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் பா.ஜ.க. தனி கவனம் செலுத்த உள்ளது. மக்களிடம் நம்பிக்கை பெற்ற எம்.பி.க்கள், பா.ஜ.க.வின் பல்வேறு பிரசாரங்கள், கூட்டங்கள், பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் முக்கிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளது. அவர்கள் வாக்காளர்கள் மத்தியில் வைத்துள்ள நிலைப்பாடு, சமூக ஊடகங்களில் வாக்காளர்களுடன் உள்ள தொடர்புகள் ஆகியவையும் பரிசீலனை செய்யப்படுகின்றன. பா.ஜ.க.வில் மாநிலங்களவை எம்.பி.க்களாகி மத்திய மந்திரிகளாக உள்ள பலர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.
அவர்கள் யார்?யார்? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது. அவர்களுக்கான இடங்கள் வெற்றி பெறக்கூடிய அம்சத்தை மதிப்பீடு செய்து தொகுதி ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 2019 தேர்தலில், பா.ஜ.க. அப்போதைய மத்திய மந்திரிகள் மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்களான ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை முறையே பாட்னா, அமேதி மற்றும் அமிர்தசரசில் வேட்பாளர்களாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 166 லோக்சபா தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த தலைவர்களை நியமித்து, அந்த தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், 70 வயதைக் கடந்த எம்.பி.க்களுக்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டில் பா.ஜ.க. முதல் முறையாக எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 158 எம்.பி.க்களில் 55 பேரை தேர்தலில் நிறுத்தவில்லை. அவர்கள் பலர் மோடி அலையின் பின்னணியில் வெற்றி பெற்றனர். 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தலைவர்கள் கட்சி விதிகளின்படி பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பலர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர். சிலருக்கு வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 37 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது 1989 தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசியல் கட்சி பெற்ற அதிக வாக்கு சதவீதம் ஆகும். அந்த தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை வென்றது, 2014-ம் ஆண்டு தேர்தலை காட்டிலும் இது அதிக எண்ணிக்கை ஆகும்.
சுதந்திரத்துக்கு பின்னர் வரலாற்றில் 2-வது முறையாக வாக்காளர்கள் மக்களவைக்கு அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைத்தனர். அதே போன்று இந்த தேர்தலில் முத்திரை பதிக்க பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான விவரங்களை மனதில் வைத்து எம்.பி.க்களுக்கான சீட்டுகள் இறுதி செய்யப்படுகின்றன. மேலும் இவற்றை முன்வைத்தே பிரதமர் மோடி எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.