;
Athirady Tamil News

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் – 24 ஆம் திகதி வரை தொடரும் நீர்க்கண்காட்சி

0

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் 18.08.2025 திங்கட்கிழமை மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை இடம்பெற்றது. நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது. பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன.

நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான இன்று 19.08.2025 செவ்வாய்க்கிழமை ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், “கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்” என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும்.

நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.