;
Athirady Tamil News

0
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்திவரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம்
போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்திவரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம்
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட போக்குவரது ஒருங்கிணைப்பு குழு தலைவருமான  கருணநாதன் இளங்குமரன்  தலைமையில் இன்றைய தினம்(25.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்  பி.ஏ. சந்திரபால, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் , இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், போக்குவரத்து பிரச்சனையினை சரியாக கையாளுதல் வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமாக விளங்குவதாகவும், பாடசாலை பிள்ளைகளின் போக்குவரத்து தேவைப்பாடுகளை ஆராய்ந்து தீர்வு காணும் களமாக இக் கூட்டத்தினைபயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அந்த வகையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து மானியத் திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் 03 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், முதலாவது “சிசுசரிய” பாடசாலை மாணவர்களுக்கான மானியத் திட்டம் அதாவது போதிய மாணவர்கள் இன்றி பாடசாலை சேவையினை முழுமையாக வழங்கமுடியாத வழித்தடங்களுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் மானியத் திட்டம் எனவும், இரண்டாவதாக “கமிசரிய” மானியத் திட்டம் அதாவது கிராமத்திலிருந்து வேலைக்கு மற்றும் வைத்திய தேவையினை நிறைவு செய்வதற்கு நாளாந்தம் கிராமத்திலிருந்து நகருக்கும், நகரத்திலிருந்து கிராமத்திற்கும் சென்று வருவதற்கான போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் மூன்றாவதாக “நிசிசரிய” இரவு இறுதி பேரூந்து சேவையும் அதிகாலை முதலாவதாக ஆரம்பமாகும் பேரூந்து சேவையிற்கான கேள்விக் கோரல் முறையில் குறைந்த கட்டணம் கோரும் பேரூந்துக்கு வழித்தடங்கல் வழங்கப்படும் திட்டமாகவும் அமையும் எனத் தெரிவித்தார். மேலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகளின் தரமான நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தினையும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், இக் கூட்டத்தினை எமது மாவட்டத்தில் நடாத்தி மக்களுக்கு தெளிவூட்டல் வழங்குமாறு அறிவித்தல்கள் வழங்கிய போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து, இச் செயலமர்வில் போக்குவரத்து நெருக்கடிகளையும் ஆராய்ந்து தீர்வுகாணும் களமாகவும் பயன்படுத்த செயலமர்வுக்கு வருகை தந்தவர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட போக்குவரது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் தலைமையுரையாற்றிய,
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை பெறுகின்றமை குறைவானதாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், இதற்காக இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் விழிப்பூட்டும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதன் ஊடாக இவ் விடயங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் எனவும், இதற்காக அரசாங்கம் ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை எனவும், பேருந்து சேவை நாட்டின் அத்தியாவசிய சேவை ஆகும் எனவும், இது ஸ்தம்பிதமானால் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும், வடக்கு மாகாணத்தில் இவ்வாறான மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாகும்எனவும் தெரிவித்தார். மேலும், இவை தொடர்பில் பூரண தெளிவுகளை வழங்கும் நோக்கில் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், இவற்றை எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் குறித்த கலந்துரையாடலும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.

மேலும், மாணவர்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை பேரூந்து சேவை (Sisu Sariya), கிராமப்புற பேரூந்து சேவை (Gami Sariya), இரவு நேர பேரூந்து சேவை (Nisi Sariya) திட்டங்களின் போக்குவரத்து வழிகாட்டிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

மேலும், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ‘சிசு சரிய’ பாடசாலைப் பேருந்து சேவையை அதிக வினைத்திறனுடனும், பயனுள்ள முறையிலும் யாழ் மாவட்டத்தில் விரிவுபடுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பங்குபற்றுனர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் திறந்த வெளிக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது போக்குவரத்து அட்டவணை ஒழுங்குபடுத்தல் மற்றும் சீரமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பயணிகளின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் போன்றன தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான  எஸ்.கபிலன், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர்   உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  எஸ்.சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் அங்கத்தவர்கள், போக்குவரத்து தொடர்பிலான பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள், சமூகமட்ட பிரதிநிதிகள் விடைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.