பிரபஞ்சத்தின் ‘பேய் துகள்’ மர்மம்… சீனாவின் நிலத்தடி ஆய்வகம் நடத்திய சோதனை முடிவுகள் வெளியீடு
பீஜிங்,
அனைத்து திசைகளிலும் பரந்து விரிந்து கிடக்கும், எல்லையற்ற, இருள் சூழ்ந்த, பிரம்மாண்டமான பிரபஞ்ச வெளியானது எண்ணற்ற மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகைய மர்மங்களில் ஒன்றுதான் ‘நியூட்ரினோ’ எனப்படும் அடிப்படை துகள் ஆகும்.
ஒவ்வொரு அணுவும் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் ஆகிய துணை அணுத் துகள்களால்(Subatomic particles) ஆனது. இந்த துணை அணுத் துகள்களை இன்னும் ஊடுருவிச் சென்று பார்த்தோமானால், அங்கு குவார்க் மற்றும் லெப்டான் உள்ளிட்ட அடிப்படைத் துகள்கள் இருப்பதை காண முடியும். எலெக்ட்ரானும் ஒரு அடிப்படைத் துகளாக பார்க்கப்படுகிறது.
இந்த அடிப்படைத் துகள்களை மேற்கொண்டு நாம் பிரிக்க முடியாது. இத்தகைய ஒரு அடிப்படைத் துகள்தான் நியூட்ரினோ. இது ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. சூரியன், விண்மீன்கள், அணுக்கரு உலைகள் மற்றும் கதிரியக்கச் சிதைவு போன்றவற்றில் இருந்து நியூட்ரினோ வெளிப்படுகிறது.
இந்த நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை நாம் அறிய உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், இவற்றை விஞ்ஞானிகளால் இதுவரை சிறைபிடிக்கவே முடியவில்லை என்பதுதான். அதாவது, நியூட்ரினோ துகளுக்கு மின்சுமை(Charge) என்பது கிடையாது. எனவே, மின்சார அல்லது காந்தசக்தியை பயன்படுத்தி நியூட்ரினோவை பிடிக்க முடியாது.
இருப்பினும் ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியையும், நம் உடலையும் கூட ஊடுருவிச் செல்கின்றன. அப்படி இருந்தும் அவை எந்த அணுவுடனும் மோதாமல் ஊடுருவிச் சென்றுவிடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு நியூட்ரினோ ஒரு அணுவை ஊடுருவிச் செல்வது என்பது, நமது சூரிய குடும்பத்தை ஒரு வால்நட்சத்திரம் ஊடுருவிச் செல்வதைப் போன்றதாகும். அந்த அளவிற்கு இவை மிகச்சிறிய துகள்களாகும்.
மேலும் இந்த நியூட்ரினோவிடம் மற்றொரு விசித்திரமான செயல்பாடும் உள்ளது. அதாவது விஞ்ஞானிகள் மொத்தம் 3 வகையான நியூட்னோக்கள்(Electron Neutrino, Muon Neutrino, Tau Neutrino) இருப்பதாக வகைப்படுத்தியுள்ளனர். ஒரு நியூட்ரினோ விண்வெளியில் பயணம் செய்யும்போது அது சட்டென ஒரு வகையில் இருந்து மற்றொரு வகை நியூட்ரினோவாக மாறிவிடுகிறது. இத்தகைய மர்மமான செயல்பாடுகளால்தான் நியூட்ரினோவை விஞ்ஞானிகள் ‘பேய் துகள்’ என்று அழைக்கின்றனர்.
இத்தகைய நியூட்ரினோக்கள் அபூர்வமாக பூமியில் உள்ள அணுக்களுடன் மோதுகின்றன. அவ்வாறு அவை மோதும்போது அந்த மோதலை பதிவு செய்து ஆய்வு செய்வதற்காக உலகின் பல்வேறு இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு ஆய்வகம் சீனாவின் ஜியாங்மென் பகுதியில், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆய்வுப்பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்கத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நியூட்ரினோக்களின் வகை மாறுபாடுகள் குறித்து இதுவரை இல்லாத அளவிற்கு துல்லியமான தரவுகள் அதில் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு வகை நியூட்ரானுக்கும் ஒவ்வொரு எடை இருப்பதாக கூறப்படும் நிலையில், இனி வரும் காலங்களில் நியூட்ரான் வகைகளின் எடை குறித்த துல்லியமான ஆய்வுகளை நடத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.