டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் இன்று(15) முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் தீவிர டெங்கு நுளம்பு பரிசோதனைகளும், தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றி துப்புரவு செய்யும் நடவடிக்கைகளும் பரவலாக இடம்பெற்றன. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் சியாத், சம்மாந்துறை பிரதேச சபைச் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பஸ்லான் நளீம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
