;
Athirady Tamil News

இந்தியா – ஸ்லோவாக்கியா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தம்

0

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கினார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராடிஸ்லாவாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள் வந்தே மாதரம் பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் அரசு மாளிகையில் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பரஸ்பர நம்பிக்கை
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா – ஸ்லோவாக்கியா பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், மூலோபாய ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்தும். இந்த முக்கிய துறையில் ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டு ஆய்வு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கு இது புதிய ஊக்கத்தை வழங்கும்” என்று தெரிவித்தார்.

முக்கிய துறைகளில்
இதையடுத்து பேசிய ராபர்ட் பிகோ, இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் ஸ்லோவாக்கியா ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். மேலும், உலக அரங்கில் இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் இணைந்து செயல்பட்டு அடுத்த கட்ட ஒத்துழைப்பை நோக்கி முன்னேறி வருவதாக குறிப்பிட்ட அவர், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

இந்தியா – ஸ்லோவாக்கியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இரு நாடுகளும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.