புதிய விதிமுறைக்கு அனுமதி ; 20 ஆம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தியாளரால் வாகன பட்டி பொருத்தப்படாத இருக்கைகளுக்கு அவற்றை பொருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு வெளியிடப்பட்ட, 2026 ஜூன் 17 ஆம் திகதியிடப்பட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உத்தரவுகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2011.08.03 ஆம் திகதி 1717/14 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக வீதிகள்) விதிகளைத் திருத்தி, 2025.09.25 ஆம் திகதி 2455/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.பின்னர் ஆசன பட்டிகளை பொருத்திக் கொள்வதற்காக 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கால அவகாசம் 2025.12.25 அன்றுடன் நிறைவடைந்தது.
எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்தக் காலம் 2026.03.20 முதல் 2026.06.19 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.