;
Athirady Tamil News

அமெரிக்காவுடனான புதிய போர் முந்தைய போரைவிட நீண்டகாலம் நீடிக்கும்: ஈரான் எச்சரிக்கை!

0

அமெரிக்காவுடன் புதிய போர் ஏற்பட்டால் அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் முகமது அக்ரமினியா ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போர் முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்கும். அந்த போர் முடியும் நேரத்தையோ அல்லது நிபந்தனைகளையோ தீர்மானிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கமாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி பேசுகையில், “ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிலடி வழங்கப்படும். ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள், ஈரானின் தற்காப்பு நடவடிக்கையின் தாக்கத்தையோ அதன் விளைவுகளையோ தீர்மானிக்க முடியாது” என எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளரான ஹுசைன் மொஹேப்பி, நாட்டின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி அனுப்பிய செய்தியை பிரதிபலிக்கும் விதமாக அரசு தொலைக்காட்சியில் பேசினார். அதில், “அமெரிக்காவுடனான மோதலில் எந்தவொரு புவியியல் வரம்புகளும் எங்களுக்கு இல்லை. எதிரிகளைத் தாக்குவதற்கு ஒரு மிகப்பெரிய களத்தை வரையறுத்துள்ளோம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கா புதிய தாக்குதல்கள் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் ராணுவத்தை முடிந்தவரை அழித்துவிட்டதாகக் கூறினார். மேலும், “நாம் அவர்களின் அணு ஆயுத பயன்பாட்டைச் செயலிழக்கச் செய்துவிட்டோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதை வெறும் 10 நிமிடங்களில் செய்துவிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.