;
Athirady Tamil News

சென்னையின் தாகம் தீர்க்கும் பூண்டி ஏரி: இதன் வரலாறு தெரியுமா? (கட்டுரை)

0

சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த ஏரி சென்னையின் தாகத்தைத் தணித்து வருகிறது.

காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும் நிலையில், மிக சுமூகமான முறையில், ஆந்திராவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன.

இதில், பூண்டி நீர்த்தேக்கம்தான் சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்ட முதல் நீர்த்தேக்கம். அதன்பிறகு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகள் சென்னை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

என்னதான் மற்ற நீர்த்தேக்கங்களில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டாலும், முக்கிய நீராதாரமாக விளங்குவது பூண்டி நீர்த்தேக்கம்தான்.

1939ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக 1939ஆம் ஆண்டு சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் சென்னை மாநகரின் மேயராக சத்தியமூர்த்தி இருந்தார். அப்போது சென்னை மாநகர பொறியாளராக ஆனந்தராவ் என்பவர் இருந்தார்.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நீர்த்தேக்கம் ஒன்று கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான அறிக்கையையும் அவர்கள் தயாரித்தனர்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், ஆங்கிலேய அரசு அந்த அறிக்கையை விரிவாக அலசி ஆராய்ந்து, திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

பூண்டி நீர்த்தேக்கம், கொற்றலை ஆற்றின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அகற்றப்பட்டன. மேலும், நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் நீர் வற்றும்போது பழமையான ஊன்றீஸ்வரர் கோவிலைக் காணலாம்.

ரூ.65 லட்சத்தில் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கம்

பூண்டி நீர்த்தேக்கம் கட்டுவதற்கு 1940 ஆம் ஆண்டு ரூ.61.07 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், 2 பங்கு தொகையை சென்னை மாநகராட்சிக்கு ஆங்கிலேய அரசாங்கம் கடனாகவும், ஒரு பங்கு தொகையை மானியமாகவும் கொடுத்தது. 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆதர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நீர்த்தேக்கத்தை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டனர். ஆனால், இரண்டாம் உலகப் போர், மழை வெள்ளம் போன்ற காரணங்களால் ஏற்பட்ட தாமதம் திட்டத்தை முடிக்க 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

ஒருவழியாக 65 லட்சம் ரூபாயில் பூண்டி நீர்த்தேக்கத்தை கட்டி முடித்தனர். 1944-ம் ஆண்டு ஜூன் மாதம் பூண்டி நீர்த்தேக்கத்தை கவர்னர் ஆதர் ஹோப் திறந்து வைத்தார். பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது அதற்கு காரணமாக இருந்த சத்தியமூர்த்தி உயிரோடு இல்லை.

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தியின் பெயரை வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு, 1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தியின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நீர்த்தேக்கத்துக்கு சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பூண்டி அணைக்கட்டின் நீளம் 770 அடி, அகலம் 18 அடி. 35 அடி உயரம் நீர்மட்டம் கொண்ட இந்த அணைக்கட்டில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 16 மதகுகள் கொண்ட இந்த அணைக்கட்டில் இருந்து மழை வெள்ளக் காலத்தில் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும்.

ஆரம்பத்தில் இதில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இதனை அடுத்து தற்போது 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் ஏரி முழுவதுமாக நிரம்பும் காலங்களில் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்குள் விடப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வந்த பின்னரே சென்னைக்கு வழங்கப்படுகிறது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முதன்மையானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தான். வடகிழக்கு பருவமழையின்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும்.

ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னை மாநகரின் மக்கள் தொகைக்கு இது போதுமானதாக இருக்காது என்பதற்காக, தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்கிறது ஒப்பந்தம்.

பூண்டி நீர்த்தேக்கம் அமைப்பதற்காக 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அகற்றப்பட்டன.

ஆந்திராவில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவது மற்றும் சென்னை மக்களுக்கு தண்ணீர் சென்று சேருவது எப்படி என்பது குறித்து பூண்டி நீர்த்தேக்கத்தின் உதவி பொறியாளர் ரமேஷ் நம்மிடம் சில தகவல்களை பதிர்ந்து கொண்டார்.

“கிருஷ்ணா கால்வாய் வழியாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது” என்றார்.

அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக் குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது.

“ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்தடையும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு கால்வாய் வழியாக அனுப்பி வைக்கப்படும்” என்று அவர் விளாக்கினார்.

பூண்டி நீர்த்தெக்கத்தை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு கொண்டுச் செல்லப்படும் தண்ணீர் அங்கு இருந்து கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் ஏரி நீர் விரைவான புவியீர்ப்பு வடிகட்டுதல் முறையில் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் சராசரியாக 6,820 லட்சம் லிட்டர் (682 ML) தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.சென்னை நகருக்கு தினசரி தேவைப்படும் தண்ணீரின் அளவு 11,570 லட்சம் லிட்டர் ஆகும்.

“2021 ஆகஸ்ட் வரை நாள்தோறும் 8,500 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021 முதல், தினமும் சராசரியாக 10,000 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் சென்னை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது” என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதமடைந்துள்ள பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் தான் திருவள்ளூர் மாவட்ட மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை மேம்படுத்தி சுற்றுலா தலமாக அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“பூண்டி நீர் தேக்கத்தில் பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை உள்ளன. இந்த பூங்காக்கள் செயல்பாட்டில் இருந்த காலங்களில் இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஆயிரம் பேர் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. எனினும், இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரசீமைக்க வேண்டும் என்று திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தரைப்பாலம் தான் நம்பாக்கம், ராமஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாக உள்ளது. உபரி நீர் திறந்து விடப்படும் போது, இந்த தரைப்பாலம் மூழ்கிவிடுகிறது. எனவே இந்த பாலத்தை மேலும் 5 அடிகள் உயர்த்தி கட்ட வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.