இரத்துச் செய்யப்பட்ட மரண தண்டனை!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிழக்கிலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தண்டனை, சவுதி உச்ச நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
இது உண்மையில் அந்தக் குடும்பத்துக்கான மகிழ்ச்சியாக இருந்தாலும்கூட, முழு இலங்கையுமே இன, மத வேறுபாடின்றி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றது. 2026 ஒக்டோபர் 13 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, இலங்கை அரசு மற்றும் வெளிவிவகார அமைச்சின் தீவிர இராஜதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனோஜனின் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட ஐவரைக் கொண்ட நிபுணர் குழு மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் மேற்கொண்ட சட்டப்போராட்டம் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டும், மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களின் வழிகாட்டல்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடு அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்களில் இலங்கை பற்றிய தவறான புரிதல்களைத் தடுத்து, சரியான செய்திகளை முன்னிலைப்படுத்த உதவியது.
செப்டம்பர் 2026 இல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், அனோஜனின் வழக்கிற்கான சட்டச் செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என உறுதிப்படுத்தினார். ஆரம்பத்தில் அனோஜனுக்கு விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அபராதத் தொகை சுமார் 26 கோடி இலங்கை ரூபாவுக்கு இணையான பெரும் தொகையாக (30 இலட்சம் சவுதி ரியால்கள்) மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ரிசானா நபீக்கின் வழக்குடன் ஒப்பிடும்போது, தற்போதைய அரசாங்கம் காட்டிய தீர்க்கமான வேகம் மற்றும் ஒருங்கிணைப்பு இங்கு குறிப்பிடத்தக்கது. ரிசானா நபீக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் மன்னிப்பு மற்றும் சட்டச் சிக்கல்கள் நீண்ட இழுபறியைச் சந்தித்த நிலையில், அனோஜன் விவகாரத்தில் அரசுத் தரப்பும், எதிர்க்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் பாரபட்சமின்றி ஓரணியில் நின்று குரல் கொடுத்தன.
தமிழக அரசியல் தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தமை இந்த விவகாரத்திற்கு சர்வதேச அளவில் நியாயமான கவனத்தைப் பெற்றுத் தந்தது. சில தரப்பினர் நாட்டின் தலைவர்களின் ஆங்கில அறிவு அல்லது வெளிநாட்டுத் தொடர்புகளை வைத்து இராஜதந்திரங்களை எடைபோடுவதுண்டு. அவ்வாறான பதிவுகள் சமூக ஊடகங்களில் அண்மைக் காலமாக நிரம்பியிருந்தன. ஆனால், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றி என்பது மொழியாற்றலை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக, தேசத்தின் மீதான நம்பகத்தன்மை, மனித நேயத்தின் அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் உறுதியான முடிவுகளில்தான் தங்கியுள்ளது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. அமெரிக்கா அல்லது ஏனைய பெரிய நாடுகளின் ஆதரவு இல்லாமல், மன்னராட்சி முறையைக் கொண்ட சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் மூலம் இந்தத் தீர்வு எட்டப்பட்டிருப்பது இலங்கை அரசின் முறையான இராஜதந்திரப் பக்குவத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கையின் வட மாகாணத்திலிருந்து தென்கோடியில் அமைந்துள்ள கதிர்காமம் ஆலயத்துக்கு ஆண்டுதோறும் பக்தர்களை ஈர்க்கும் இரு மாத கால பாத யாத்திரையின் போது நிகழ்ந்த எதிர்பாராத தொடர் நிகழ்வுகளிலிருந்தே இந்த வழக்குக்கான ஆரம்பப்பொறி உருவானது. பயணத்தின்போது ஒரு தெருநாய் யாத்திரிகர்களுடன் இணைந்து கொண்டதுடன், அவர்களை விட்டு விலகாமலும் இருந்தது. அதன் விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள், அதற்கு முருகனின் மற்றொரு பெயரான ‘சுப்ரமணி’ என்று பெயரிட்டு, பிஸ்கட், ரொட்டி, பால் மற்றும் சாதம் போன்ற சைவ உணவுகளை அளித்து வந்தனர். நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் அந்த ஊர்வலத்துடன் நடந்து சென்ற அந்த விலங்கின் காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவின;
கிழக்கு நகரமான கல்முனையில், ஒருவர் நாயை உதைக்கும் காட்சி காணொளியாகப் பதிவாகிப் பரவியதைத் தொடர்ந்து அங்கு சூழல் மாறியது. இக்காணொளி பரவலாகப் பகிரப்பட்டு, பல தரப்பினரிடமிருந்தும் கடும் கண்டனத்தைப் பெற்றது. அந்த நபர் கைது செய்யப்பட்டு, மன்னிப்பு கோரியதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இணையத்தில் எழுந்த கோபம் அதோடு நின்றுவிடவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விவாதம் பரவியபோது, இரு மதச் சமூகங்களை இலக்காகக் கொண்ட அவதூறான பதிவுகள் வெளியாகின. சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கைத் தமிழரான அனோஜனுக்கு, நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான முகநூல் கருத்து ஒன்றை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் அது மேல்முறையீட்டில் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனோஜனின் மரண தண்டனை முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த நல்ல செய்தி வெளிவந்த வேளையிலும் கூட, சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் விஷமத்தனமாக இனவாதத்தைத் தூண்டும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும் கருத்துக்களைப் பதிவிட்டு வருவது கவலைக்குரியதான உள்ளது. மரண தண்டனையிலிருந்து ஒரு மனிதனின் உயிர் காப்பாற்றப்பட்டதை மனிதாபிமான வெற்றியாகப் பார்க்காமல், அதனைத் திசைதிருப்பும் முயற்சிகள் நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
சவுதி அரேபியா மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் காரணங்களை இதனுடன் தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோர் மற்றும் வன்மத்தைக் கக்குபவர்கள் மீது அரசாங்கம் உடனடியாகச் சட்டத்தின் பிடியை இறுக்க வேண்டும். அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டிருப்பது தற்காலிகமான ஒரு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக இருந்தாலும், அவர் செய்த தவறுக்கான ஏனைய சிறைத் தண்டனை நடைமுறைகள் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வர வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் நம் நாட்டு இளைஞர்கள் எவரும் இதுபோன்ற மத உணர்வுகளைப் புண்படுத்தும் அல்லது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டியதும் கட்டாயமானதாகும்.
சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்; அவர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ளது. இத்தகைய பொருளாதாரச் சார்பு நிலை, தொழிலாளர்களைத் தங்கள் சொந்த நாட்டின் சட்ட அமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது என்று மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றன.
இஸ்லாமியச் சட்டத்தின் பிரகாரம் கருணை மற்றும் மன்னிப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை உணர்ந்து, இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த வெற்றியை ஒரு சாமானிய மனிதனின் உயிரைக் காப்பதற்காக அனைத்து இன, மத வேறுபாடுகளையும் கடந்து பெரும்பான்மையினத்தவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசுத் தரப்பினர் இணைந்து பெற்ற வெற்றி என்ற கோணத்திலேயே நாம் இதனைப் பார்க்க வேண்டும்.