இன்பம் தரும் தீபாவளித் திருநாள்!
இன்பம் தரும் தீபாவளித் திருநாள் இலங்கை நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வாழ்வில் அவர்களுடைய பண்பாடும் கலாசாரமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் பல பண்டிகைகள் ஆழ்ந்த அர்த்தங்களோடு கொண்டாடப்பட்டு வருவது நம் மரபுவழிச் சிறப்பாகும். சித்திரைப் புத்தாண்டு, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், ஆடிப்பிறப்பு, கார்த்திகை விளக்கீடு போன்ற வரிசையில், தீபாவளித் திருநாளும் முத்திரைப் பதிக்கும் ஒரு மாபெரும் பண்டிகையாகத் திகழ்கிறது.
தீபாவளி என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, கொடியவனான நரகாசுரனை வதம் செய்த ஐப்பசி மாத சதுர்த்தசி திதியைக் குறிப்பதாகும். நரகாசுரன் தீய சக்திகளின் உருவாகி, மக்கள், தேவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் பெருந்துன்பத்திற்குள்ளாக்கி வந்தான்.
அவனது கொடுமைகளில் இருந்து விடுபட மக்கள் நாராயணனை வேண்டி வழிபட்டனர். மக்களின் வேண்டுதலுக்கு இணங்க, சத்தியபாமாவோடு புறப்பட்டு வந்த நாராயணன் நரகாசுரனுடன் யுத்தம் செய்து அவனை வதம் செய்தான். அவ்வாறு தீயவனை அழித்த அந்தத் திருநாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையின் இறுதி நிலையில் சிலருக்கு ஞானோதயம் ஏற்படுவதைப் போல, நரகாசுரன் அழியும் தறுவாயில் அவனுக்கு நல்லறிவு பிறந்தது. தான் செய்த பாவங்களையும் மக்கள் பட்ட துயரங்களையும் உணர்ந்தவன், கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி ஒரு வரம் வேண்டினான். தான் இறந்த இந்த நாள், கடந்த காலங்களை விட மகத்துவமான ஒளியும் சந்தோசமும் நிறைந்த நாளாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் புத்தாடை அணிந்து, நல்லுணர்ச்சியோடு ஒன்று சேர்ந்து இனிமையான தின்பண்டங்களை உண்டு மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். மேலும், தனது கொடுமையால் இருள் சூழ்ந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றி மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யுமாறு அவன் கோரியதை ஏற்று, கிருஷ்ணர் அதனைத் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடும்படி கட்டளையிட்டார்.
தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அதிகாலையில் எழுந்து தலையில் நல்லெண்ணெய் தேய்த்துத் தூய நீரில் நீராடுவர். பின்னர் புதிய ஆடைகளை அணிந்து, ஆலயங்களுக்குச் சென்று பக்தியுடன் வழிபட்டுத் தங்கள் வாழ்வு ஒளிபெறப் பிரார்த்தனை செய்வார்கள். உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பலகாரங்களையும் இனிப்புப் பண்டங்களையும் வழங்கி தாமும் உண்டு மகிழ்வர்.
இந்துக்களின் பண்பாட்டில் பண்டிகைகள் என்றாலே ‘பகிர்ந்து உண்ணுதல்’ என்பது மிக முக்கியமானதாகும். அதாவது, தாமுமுண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வது நமது பாரம்பரியத்தின் உன்னத அம்சமாகும்.
தீபாவளித் திருநாளில் உணவுப் பண்டங்களை மட்டும் பகிர்வதோடு நின்றுவிடாமல், வசதியற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து அவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், ஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது தெய்வங்களுக்குப் புதிய பட்டு ஆடைகள் சாத்தி, சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபடுவதும் பெரும் பலனைத் தரும்.
அசாதாரணமான முறையில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், கிருஷ்ண பரமாத்மா அதனை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே தீபாவளியின் உட்பொருளாகும். நரகாசுரன் அதர்ம வழியில் சென்றதால்தான் விஷ்ணு பகவான் அவனை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். மனித வாழ்க்கையில் தர்மத்தைக் கடைப்பிடித்தல் மிக அவசியமானது.
இதனால்தான் உணவுப் பண்டங்களுடன் புத்தாடைகளும் வழங்கி மகிழும் வழக்கம் வந்தது. இக்காலகட்டத்தில், புடவை வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் புதிய ஆடைகளை விற்றுப் பொருளாதாரத்தில் விருத்தி அடைவதும் இப்பண்டிகையின் மற்றொரு சமூகப் பொருளாதாரச் சிறப்பம்சமாகும்.
பண்டிகைகள் என்றாலே மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும் காலங்களாகும். குறிப்பாக, பட்டாசு கொளுத்தி விளையாடுவது சிறுவர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதுகுறித்து ஆன்மிகப் பெரியவரான திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிடுகையில், “நாம் பட்டாசு கொளுத்தும் வேளையில், நம்மிடமுள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மதம் என்னும் தீய குணங்களை இறைவனின் திருநாமங்கள் என்னும் பட்டாசுகளால் சுட்டுத் தள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
‘தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள்படும். நரகாசுரன் இறந்த இந்நாளில் எங்கும் ஒளி ஏற்றி வழிபடுதல் வேண்டும். தீப ஒளியைக் கண்டு களிப்பதுடன், நமது உள்ளத்திலும் ‘ஞான ஒளி’யை ஏற்றுதல் வேண்டும். எம் உள்ளே இருக்கும் ஆணவ இருட்டே நம் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. அந்த அறியாமை இருளைப் போக்குவதே தீபாவளியின் உயர்ந்த தத்துவமாகும்.
நமது உள்ளக்கோயிலில் ஞான விளக்கேற்றினால் அறியாமை இருள் தானாகவே விலகிவிடும். இந்தியாவின் பல பகுதிகளில் தீபங்களை ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. இலங்கையிலும் மக்கள் இதனைத் தீவிரமாகப் பின்பற்றி வாழ்வில் ஞானத்தையும் ஒளியையும் பெற வேண்டும்.
தீபாவளி அன்று அதிகாலையில் வீட்டு முற்றத்தில் தெற்கு நோக்கியவாறு பெரிய தீபம் ஒன்று ஏற்றுவர். இதனை ‘இயமதீபம்’ என்பர். மேலும், அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இது மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, நம் துயரங்களையும் நீக்கும். முற்காலத்தில் நம் முன்னோர்கள் சனிக்கிழதோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தனர். அத்தகைய ஆரோக்கிய வாழ்வை நாமும் பேண வேண்டும்.
பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிலர் தவறான பாத செல்வதுண்டு. முற்காலத்தில் நரகாசுரன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கேட்டதை அடிப்படையாக வைத்து, சிலர் தீபாவளியன்று மது அருந்தியும், ஆடு போன்றவற்றை வெட்டி மாமிசம் புசித்தும் மகிழ்ந்தனர்; இது முற்றிலும் தவறான செயலாகும். நரகாசுரன் எப்படி அசுரத்தனமாக வாழ்ந்து அழிந்தானோ, அதேபோல் மனிதர்கள் அசுரத்தனமாக வாழ்வது பாவமாகும்.
இக்காலத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், உயிர்களைக் கொன்று மாமிசம் புசிப்பதும் மது அருந்துவதும் மகா கொடிய பாவமாகும். இதனை உணர்ந்து நாம் அறியாமையை அகற்றி, பண்டிகையின் உண்மையான தாற்பரியத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
வளர்ந்து வரும் இளம் சந்ததியினருக்கு நல்ல விழுமியங்களைக் கற்பித்து, நற்செயல்களில் ஈடுபட வழிகாட்டுவது இன்றைய தலைமுறையின் தலையாய கடமையாகும். சமயத் தலைவர்கள் பலரும் வலியுறுத்துவது போல, நம் சமய விழுமியங்களைக் கடைப்பிடித்து அனைவரும் ஒன்றுபட்டு இன்பமாக வாழும் சிந்தனை வளர வேண்டும்.
தீபாவளியின் உள்ளார்ந்த தத்துவத்தைச் சிந்திக்கும்போது, தீபம் என்பது அறிவின் அடையாளமாகும். ஞான தீபம் ஏற்றப்படும் இடத்தில் அறியாமை இருள் விலகிவிடும். ஆணவமும் அறியாமையும் கருமை நிறமுடையவை; அரக்கர்களின் நிறமும் அதுவே. எனவேதான் நரகாசுரன் அந்த அறியாமை இருளுக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளான். காத்தற் கடவுளான மகாவிஷ்ணு அந்த ஆணவ இருளை அகற்றி ஞான ஒளியைப் பரப்புகிறார்.
மனத்தில் குடிகொண்டுள்ள ஆணவ இருள் நீங்கி, ஞான ஒளி பிரகாசிப்பதே தீபாவளியின் குறிக்கோளாகும்.
பாரதியார், “உள்ளத்திலே ஒளி உண்டானால் வாக்கிலே ஒளி உண்டாகும்” என்றார். நம் உள்ளத்தில் தூய்மை பிறக்கும்போது, நம் எண்ணங்கள் தன்னலமற்றதாக மாறும். பிற உயிர்களையும் அயலவரையும் நேசிக்கும் பரந்த மனப்பான்மை நம்மிடம் வளர வேண்டும்.
மறம் அழிந்து அறம் வெல்லவும், அதர்மம் நீங்கி தர்மம் தழைக்கவும், இந்துக்களாகிய நாம் இளம் தலைமுறையினர் மத்தியில் தூய சிந்தனைகளை விதைக்க வேண்டும். அன்பு நீர் ஊற்றி அறிவுப் பயிரை வளர்க்க வேண்டும்.
சமூக கலாசார விழுமியங்களை அவர்களுக்குச் சொல்லித் தந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு வாழையடி வாழையாகக் கொண்டு செல்ல வேண்டும். இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, புறங்கூறாமை, மது அருந்தாமை போன்ற நற்பண்புகளை இளம் தலைமுறைக்கு ஊட்டி, இன்சொல் பேசி, பெரியோரை மதித்து, மனிதநேயத்துடன் வாழ இத்தீபாவளி திருநாள் நமக்கு நல்லதொரு வழிகாட்டட்டும்!