;
Athirady Tamil News

இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு…!!

0

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின.

சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், மோசமான வானிலை காரணமாக அருணாச்சலப் பிரதேச இமயமலைப் பகுதியில் காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் ஈடுபட்டார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை, அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.

இரண்டாம் உலக போர் விமான பாகங்கள் கண்டு பிடிப்பு

அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குஹ்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இந்த பயணத்தில் குஹ்லேஸ் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் குழுவும் இடம் பெற்றிருந்தது. இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து நிறைந்த பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குஹ்லெஸ் தெரிவித்துள்ளார்.

சிதைந்த நிலையில் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையின் போது பனிப்புயலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.