;
Athirady Tamil News

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி – கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு..!!

0

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் நீர்வள ஆணையம் மற்றும் அணையின் கண்காணிப்பு குழு சார்பில் மத்திய நீர்வள ஆணைய துணை இயக்குனர் ராகேஷ் குமார் கவுதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முல்லைப்பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம்ககடந்த 2010-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு நடத்தப் பட்டது.

முல்லைப்பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையில் வலுவாக உள்ளது என கண்டறியப்பட்டது. இதுவரை முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்பு குழு கூட்டம் 14 முறை நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பது குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக அரசின் காவிரி தொழில் நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப்பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையில் வலுவாக உள்ளது. அணையின் பாதுகாப்பை கண்காணிப்பு குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ள மத்திய நீர்வள ஆணையம், இருப்பினும் அணை பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்திருப்பது மத்திய அரசின் நிலைப்பாட்டில் முரண்படுவதாக உள்ளது.

எனவே உச்சநீதிமன்றம் உத்தரவுபடி அணையை பலப்படுத்துவதற்குமுன், அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்வது நியாயமாக இருக்காது. கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி 18 நாட்கள் வரை 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முறையாக இருக்கின்றன. எனவே, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவு படி, முல்லைப்பெரியாறு அணையில் எஞ்சியுள்ள பலப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கேரள அரசு முட்டுக்கட்டை விதித்து வருகிறது. தனது உத்தரவுகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு குழுவும் தவறிவிட்டது. அணையின் பாதுகாப்பு தொடர்பான அர்த்தமுள்ள ஆய்வை மேற்கொள்ள, உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகள், கண்காணிப்பு குழுவின் முடிவுகள் குறித்த காலத்துக்குள் முதலில் அமல்படுத்த வேண்டும்.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து விதமான, உதவிகளும் ஒத்துழைப்பை அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

உச்சநீதிமன்றம் கடந்த 2006, 2014-ம் ஆண்டுகளில் அளித்த தீர்ப்பின்படி, அணையை பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு பணிகள் நிறைவு செய்த பிறகு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய மத்திய நீர்வளஆணையம், கண்காணிப்பு குழுவுக்குஉத்தர விடவேண்டும. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.