;
Athirady Tamil News

துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை உணர முடியும்- பிரதமர் மோடி..!!

0

பக்த துக்காராம் துறவி மற்றும் கவிஞராவார். கீர்த்தனைகள் என்ற ஆன்மீக பாடல்கள் வழியாக சமுதாய வழிபாட்டை அவர் மேற்கொண்டார். அவர் புனே நகரின் தேஹு பகுதியில் வாழ்ந்தார். அவரது மறைவுக்குப்பின் மலைக்கோவில் கட்டப்பட்டது.

36 கோபுரங்களை கொண்ட கல் கட்டடமாக கட்டப்பட்டுள்ள அந்தக் கோவிலில் பக்த துக்காராமின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று தமது மகாராஷ்டிரா மாநில பயணத்தின்போது துக்காராம் மலைக்கோயிலை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைத்தார். அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கூறியதாவது:

மனிதப்பிறப்பில் துறவிகளின் பிறப்பு அரிய சிறப்புரிமையாகும். துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை தானாக உணர முடியும். இந்தப் புனித புண்ணிய பூமியான தேஹுவுக்கு வந்தபோது அதே உணர்வை நான் பெற்றேன் உலகில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றாக இந்தியா இருப்பது பெருமையான ஒன்றாகும்.

இதற்கான பெருமை துறவிகள் மற்றும் முனிவர்களின் பாரம்பரியத்துக்கு சொந்தமானதாகும் இந்தியா துறவிகளின் பூமியாக இருப்பதே இந்தியாவின் நிலைத்தன்மைக்கு காரணமாகும். பக்த துக்காராமின் அன்பு, கருணை, சேவை ஆகியவை அவரது பாடல்களின் வடிவில் இன்னும் இருக்கிறது.

இன்றைக்கும் நாடு தனது கலாச்சார மாண்புகளுடன் முன்னேறி செல்வதற்கு துக்காராமின் பாடல்கள் நமக்கு சக்தியை அளிக்கின்றன. சத்ரபதி சிவாஜி போன்ற தேசிய வீரர்களின் வாழ்க்கையில் பக்த துக்காராம் போன்ற துறவிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்தின்போது வீரசாவர்கர் தண்டிக்கப்பட்ட போது, கைவிலங்கை இசைக்கருவி போல பயன்படுத்தி, அவர் துக்காராமின் பாடல்களை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பந்தர்பூர், ஜெகன்னாத், மதுரா, காசி, அமர்நாத் போன்ற யாத்திரைகள் நாட்டின் வேற்றுமையை ஒன்றுபடுத்தி, ஒரேபாரதம், உன்னத பாரதம் என்ற எழுச்சியை உருவாக்குகின்றன.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில், காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பு, சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை இதற்கு உதாரணகள். நமது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நமது பழைய அடையாளம் மற்றும் பாரம்பரியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமையாகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்ததாக மாறியுள்ள நிலையில், வளர்ச்சியும் பாரம்பரியமும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

அனைவரது முயற்சிகளும் சரியான திசையில் ஒன்று சேர்ந்தால், எத்தகைய தீவிரமான சிக்கல்களுக்கும் தீர்வுகாண முடியும். சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டில் நலத்திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த நாடு உறுதி பூண்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் ஏழைகள் அடிப்படை வசதிகளை பெற்று வருகின்றனர்.

தலித், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தொழிலாளர்களின் நலன்களே இன்று நாட்டின் முதல் முன்னுரிமையாகும். தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரது பங்களிப்பும் அவசியம். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தூய்மையை பராமரிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.