;
Athirady Tamil News

சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடக்கம்!!

0

சென்னை தீவுத்திடலில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் 47-வதுசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. இந்தவிழாவில், அமைச்சர்கள் கா.ராமசந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுலா கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஹோட்டல் தமிழ்நாடு உணவகம், 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், தீவுத்திடல் முகப்பில் வள்ளுவர் கோட்டம் கல் தேர்,மாமல்லபுரம் சிற்பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இந்த கண்காட்சியில், தீயணைப்புத் துறை, ஆவின், மெட்ரோ ரயில், மின்சார வாரியம், சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகள் என 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 20 ஆயிரம் சதுர அடிபரப்பளவில் பேய் வீடு, 3டி திரையரங்கம், டெக்னோ ஜம்ப், ஸ்கிரீன் டவர், ராட்சத ராட்டினம், நவீன கேளிக்கை சாதனங்கள், பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில், மீன் காட்சியகம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்டபல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தீவுத்திடலில் ஒவ்வொரு அரங்குகளையும் அமைச்சர்கள் பார்வையிட்ட பின்பு, குறுகிய காலத்துக்குள் விரைவாக அரங்குகளை அமைத்த தீயணைப்புத் துறை, பட்டுநூல் வளர்ச்சித் துறை,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளுக்குப் பரிசுகளை வழங்கினர். அப்போது சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வரின் ஆக்கப்பூர்வமான பணிகளையும், மக்கள்நலனுக்காகச் செயல்படுத்தக் கூடிய புதிய திட்டங்களையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசுத் துறை அரங்கங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 125 சிறியகடைகள், 60 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக சுமார் 5 ஆயிரம்பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

வரும் காலங்களில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகப் பாரம்பரியம் மற்றும் ஆன்மிக சுற்றுலா, கடற்கரைசுற்றுலா, சாகசச் சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் சுற்றுலா, வணிகச் சுற்றுலா உட்பட 10 சுற்றுலா பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “இந்த சுற்றுலா, தொழில் பொருட்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை 70 நாட்கள் நடைபெறும்” என்றார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற முக்கியமான கோயில்களின் பிரசாதங்கள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறை அரங்கத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செலுத்தப்படும் 12 வகையான தடுப்பூசிகள், கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் ஆர்.பிரியா,துறையின் செயலாளர் சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.