;
Athirady Tamil News

தமிழரின் சொந்தக் காணிகளை தமிழரிடமே கையளிப்பதற்கு விவாதம் எதற்கு – நாடாளுமன்றில் வியாக்கியானம்!

0

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில் குறிப்பிடுகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் தனது கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்ததையடுத்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெறும் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எந்த விவாதங்களும் அவசியமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டுகின்றார்

எதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை என்பதாலேயே அதில் நாம் கலந்து கொள்ளவில்லை.

அதிபர், பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு தீர்க்கமான முடிவினை எட்டமுடியும். மாறாக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டி கலந்துரையாடுவதால் எந்த பயனும் இல்லை.

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து ரணில் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றார் ஆனால் பிரதமர் வேறு ஒன்றை சொல்லி மக்களை குழப்புகின்றனர்” எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.