;
Athirady Tamil News

இலவச மின்சாரம்.. 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு.. ராஜஸ்தான் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும். மாநில அரசு வாரியங்கள், பெருநிறுவனங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கு 30,000 மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். தோல் நோய் தாக்குதலால் கால்நடைகளை இழந்த கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும். புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.