;
Athirady Tamil News

முடிவிற்கு வந்தது இந்தியா உடனான பதிலடி வரிகள்: அமெரிக்காவில் பல தரப்பினரும் வரவேற்பு !!

0

2018-ம் வருடம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இந்தியாவிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்திருந்தது. இதற்கு பதிலடியளிக்கும் விதமாக இந்தியா 28 அமெரிக்க பொருட்களின் மீது கூடுதல் வரி விதித்திருந்தது. இதில் பாதாம், ஆப்பிள், மற்றும் பட்டாணி உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். அமெரிக்காவில் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவர் அமெரிக்க அதிபர் பைடனுடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பைடனுனான பேச்சுவார்த்தையினால், தற்போது இந்த வரிகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 90 நாட்களில் இது முடிவுக்கு வரும். இதை மகிழ்ச்சியோடு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏற்றுமதியாளர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். செனட்டர் மரியா கேன்ட்வெல், “இன்று வாஷிங்டனின் உலகப்புகழ் பெற்ற ஆப்பிள்களுக்கும், 1400-க்கும் மேற்பட்ட ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்கும் மிக நல்ல நாள் என்றும் வாஷிங்டனின் விவசாயப் பொருளாதாரத்திற்கு இந்த செய்தி மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்” எனவும் கூறினார். காங்கிரஸ் பெண் உறுப்பினர் சுஸன் டெல்பென், “ஏற்கனவே இருந்த வரியமைப்பு இந்தியாவுடன் அமெரிக்கா வியாபாரம் செய்வதை மிகவும் கட்டுப்படுத்தியது.

தற்போது இவை நீக்கப்பட்டதினால், ‘வியாழக்கிழமை ஒப்பந்தம்’ ஒரு மிகப்பெரிய வெற்றி என்று நான் பார்க்கிறேன்” என கூறினார். வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன் தலைவர் டாட் ஃப்ரைஹோவர், “இதன் மூலம் வாஷிங்டனின் ஆப்பிள் உற்பத்தி துறையினரால் இந்தியாவில் உள்ள பிற நாட்டு ஏற்றுமதியாளர்களுடன் சுலபமாக போட்டியிட முடியும். வாஷிங்டனின் உலகத்தரம் வாய்ந்த ஆப்பிள்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க இதன் உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்தனர். இப்பொழுது இந்த வரி நீக்கத்தால் இழந்திருந்த சந்தையை மீண்டும் அடைய முடியும்” என தெரிவித்தார்.

வடமேற்கு தோட்டக்கலை கவுன்ஸில், வாஷிங்டன் ஆப்பிள் ஆணையம் மற்றும் உள்ளூர் விவசாயிகள் அனைவரும் இந்த நகர்வை பாராட்டியுள்ளனர். வாஷிங்டனின் விவசாய துறைக்கான இயக்குனர் டெரக் சாண்டிஸன், “இது மிகப்பெரிய வெற்றி. வாஷிங்டனின் விவசாயத்துறைக்கும், குறிப்பாக வாஷிங்டனின் ஆப்பிள் உற்பத்தி துறைக்கும் மிக நல்ல செய்தியாகும்” என கூறினார். இதுகுறித்து வடமேற்கு தோட்டக்கலை கவுன்ஸில் தலைவர் மார்க் பவர்ஸ், “இந்தியாவுடன் மீண்டும் வியாபாரம் செய்ய அமெரிக்க விவசாயிகள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்றும் இது ஆப்பிள்களுக்கான வெற்றி என தெரிவித்தார். 2017-ல் 120 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஆப்பிள் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இந்தியாவின் பதிலடி வரியால் அது ஒரு மில்லியனாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.