;
Athirady Tamil News

மயக்க மருந்து வழங்கி நெடுநாள் கொள்ளை: நுவரெலியா பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத தம்பதி

0

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை வழங்கி திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசங்களில் வசிக்கும் திருமணமாகாத தம்பதியினர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

“கடந்த 31ஆம் திகதி மிதியகல – தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு வந்துள்ளார்.

திருட்டுச்சம்பவம்
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும், அவரிடம் “அம்மா எங்கே போகிறீர்கள்?” என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? எனக் கேட்டு உடனடியாக பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதுடன், பொருளாதார நிலையில் இருந்து மீள உதவுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அப்பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு அலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர்.

தைக்கப்பட்ட ஆடைகளை சிலவற்றை விற்பனை செய்து, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிப்புக்குள்ளான பெண் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு வந்ததையடுத்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை சந்தேகநபர்கள் கொடுத்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு விசாரணை
இருவரும் அவற்றை வாங்கி பருகியுள்ளனர். அதன்பின்னர் பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்துள்ளனர்.

மேலும், அவர்கள் சுயநினைவு திரும்பியபோது,​​ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணம் இருந்ததாகக் தெரியவந்துள்ளது.

இதன்படி சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து, மிகவும் நுட்பமான முறையில் அவதானித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் .

இந்நிலையில், சந்தேகநபர் பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை
இதற்கமைய, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபரான ஆண் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார் எனவும், அதன் பின்னர், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.