மூன்றாம் அணு ஆயுத யுகத்தின் விளிம்பில் உலகம்., பிரித்தானியா எதிர்கொள்ளும் மிரட்டல்கள்
உலகம் மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக பிரித்தானிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் அதன் மேற்கு கூட்டாளிகள் புதிய அணு ஆயுத மிரட்டல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஆயுத படைகள் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடகின் (Tony Radakin) எச்சரித்துள்ளார்.
மேலும், உலகம் தற்போது மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
லண்டனில் Royal United Services Institute (RUSI) பாதுகாப்பு ஆய்வு மையத்தில் உரையாற்றியபொது அவர் இதனை கூறினார்.
பனிப்போரின் காலத்தில் அணு சக்தியின் முதல் யுகம் தொடங்கியதாகவும், அதன் பிறகு ஆயுத குறைப்பு (disarmament) முயற்சிகளுடன் இரண்டாவது யுகம் கடந்ததாகவும், இப்போது உலகம் மூன்றாவது அணு யுகத்திற்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் அணுசக்தி அச்சுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் மீண்டும் பரவலாகி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இப்புது யுகத்தில், ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் பயிற்சிகள், NATO நாடுகளுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாகவும், பல நாடுகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவும், அதிகப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்பந்த நிலையை உருவாக்கியுள்ளன.
பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைமை
பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டை விளக்கி உரையாற்றிய சர் டோனி, ரஷ்யா நேரடியாக பிரித்தானியாவை தாக்க வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
ஆனால், அணு தடுப்புகளை உறுதியாகவும் மேம்படுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அணு ஆயுதங்களின் முக்கியத்துவத்தை கூறிய அவர், பிரித்தானியாவின் அணு ஆயுதங்கள் புடினுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் பிரித்தானியாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்களும் ஆயுதங்களும் புதுப்பிக்க முந்தைய அரசுகள் பாரிய முதலீடுகளை செய்துள்ளன என்றும் கூறினார்.
சர்வதேச அணு ஆயுத மிரட்டல்கள்
சீனாவின் அணு ஆயுதங்களின் வளர்ச்சி, ஈரானின் சர்வதேச அணு ஆணையத்துடன் ஒத்துழைக்காத நிலை மற்றும் வட கொரியாவின் ஏவுகணை திட்டங்கள் உலகளாவிய பாதுகாப்புக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் தெளிவான மதிப்பீடுகளுடன் செயல்பட வேண்டும் என்றும், எந்நேரமும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.