திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடினார்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா வெகு விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பமேளாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது குடும்பத்துடன் பிரயாக்ராஜ் வருகை தந்தார். பிறகு அராலி காட் பகுதிக்கு படகு சவாரி செய்தார் அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கே.பி.மவுரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதையடுத்து திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடினார். முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ் உள்ளிட்ட பல துறவிகள் அவருடன் புனித நீராடினர்.
பிரயாக்ராஜ் புறப்படுவதற்கு முன், அமித் ஷா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “சனாதன கலாச்சாரத்தின் தடையற்ற ஓட்டத்தின் தனித்துவமான சின்னமாக கும்பமேளா உள்ளது. நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட நமது நித்திய வாழ்க்கை தத்துவத்தை கும்பமேளா பிரதிபலிக்கிறது. இன்று, புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெறும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் இந்த மாபெரும் விழாவில் சங்கமத்தில் நீராடி, துறவிகளின் ஆசீர்வாதத்தை பெற ஆர்வமாக உள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
புனித நீராடிய பிறகு அனுமன் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். பல்வேறு மடம் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று துறவிகளை சந்தித்தார்.