மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கட்டமாக 119 இந்தியர்களுடன் புறப்பட்டுள்ள இரண்டு ராணுவ விமானங்கள், நாளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றவுடன், எல்லைப் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்கி, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல்வேறு நாட்டினரை நாடு கடத்தி வருகிறார்.
முதல்கட்டமாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், கடந்த வாரம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
சுமார் 40 மணிநேர பயணத்தின்போது, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கைதிகளை போன்று மிகக் கொடூரமாக நாடு கடத்தியதாக வேதனை தெரிவித்திருந்தனர்.
இந்தச் செயலை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது வழக்கமான நடைமுறைதான் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கை விலங்குடன் நாடு கடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே மேலும் 119 இந்தியர்களை இரண்டு விமானங்கள் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.
இதில், ஒரு விமானம் சனிக்கிழமையும் மற்றொரு விமானம் ஞாயிற்றுக்கிழமையும் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மோடி, சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அமிர்தசரஸ் ஏன்?
முதல்கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்த நிலையில், விமானம் ஏன் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது என்று மாநில அரசு கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், அடுத்த இரு விமானங்களும் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.