;
Athirady Tamil News

தண்டணைகளில் படையினர் பாதுகாக்கப்பட்டதன் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்தது. – முன்னாள் தவிசாளர் நிரோஷ்

0

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு, நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இடம்பெறாது சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந் நிலைமைக்குக் காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று நாட்டின் நீதிமன்றத்தின் உள்ளே படுகொலை நடக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் அரச வளாகத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேர்கின்றது. சாதாரணமான துப்பாக்கிப் பிரயோகங்கள் எங்கும் நடக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர். நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நிPமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார். அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் தரப்பின் தொழில்சார் ஒழுக்கத்தை பகிரங்கப்படுத்தி நிற்கின்றன. படைகளின் தொழில் முகப்படுத்தலில் ஒழுக்கம் இன்மைகளை வெளிக்காட்டுகின்றன.

சாதாரணமாக இவற்றை படைகளில் இருந்து விலயோர் என்று கைவிரித்து விட முடியாது. படைகளில் பணியாற்றிய மனிதர்கள் உயர் ஒழுக்கம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதியை அவர்களது சேவைக்கால பயிற்சி மற்றும் சத்தியப்பிரமாணங்களின் வாயிலாகப் பெற்றிருக்க வேண்டும். இது இலங்கையில் நடைபெறவில்லை.
காரணம் தமிழ் மக்கள் மீது படைகளில் இருந்தவர்கள் மேற்கொண்ட அத்தனை பாலியல் வல்லுறவுகள், மிலேச்சத்தனமான படுகொலைகள், சிறார் படுகொலைகள் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களை படைத்தரப்புச் செய்த போதும், அவற்றுக்கு அரச பாதுகாப்பு அளிக்கப்பட்டதன் விளைவே இலங்கையில் இராணுவ ஒழுக்கம் மற்றும் பொலிசாரின் ஒழுக்கம் புகட்டப்படாத குற்றக் கலாச்சாரத்திற்கான அடிப்படை என்பதை அரச இயந்திரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதிகள், பொதுமன்னிப்பு அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கூட தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமான கொலைகளை புரிந்த படைத்தரப்பினரை குற்றத்திற்கான தண்டனையில் இருந்து பாதுகாத்துள்ளனர்.
இவ்வாறான மனித நாகரிகமற்ற சட்டத்திற்கும் நீதிக்கும் ஏற்புடையதல்லாத கலாச்சாரம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள் பேரினவாதத்தின் வெற்றியாக அரசும் மாறி மாறி ஆட்சியேறிய அரசாங்கங்களும் கட்டிவளர்த்த கலாச்சாரம் தான் இன்று நாடே குற்றங்களுக்குள் முழ்கக் காரணமாகவுள்ளது.

இந் நிலையில் துரிதமாக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களை படையினரை பாதுகாக்கின்றோம் என அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. குற்றங்களுக்கு பொறுப்புச் சொல்லாத கலாச்சாரம் ஒருபோதும் குற்றங்கள் மீள நிகழாமையினை உறுதிப்படுத்தாது. இவ்வாறு முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

news12032025

You might also like

Leave A Reply

Your email address will not be published.