புதிய காஸா போா் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், புதிய செயல்திட்டத்தின் கீழ், காஸா போா் நிறுத்தம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும்; அனைத்து பிணைக் கைதிளும் விடுவிக்கப்படுவாா்கள்; பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறும்; இதன் மூலம், நிரந்தர போா் நிறுத்தம் உறுதியாகும் என்று தெரிவித்தன.
இருந்தாலும், இந்த செயல்திட்டம் குறித்து இஸ்ரேல் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை சுமாா் 51,000 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1. 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இருந்தாலும், அதை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை தொடா்ந்து தோல்வியடைந்துவருகிறது.