போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை வெளியிட்ட போப் பிரான்சிஸின் இறப்புக்கான இரங்கல் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் மார்ச் 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மரணத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பல நாடுகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலின் வெளியுறவுத் துறை, போப் பிரான்சிஸின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், போப் பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசிர்வாதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கத்தோலிக்க நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்கள் மற்றும் இணையவாசிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும், அங்கிருந்த கத்தோலிக்க தேவாலயம் தகர்க்கப்பட்டதற்கும் போப் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
போப் பிரான்சிஸின் மரணத்திற்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்துள்ள நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை இரங்கலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.