துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாசார நகரமான இஸ்தான்புல்லில் இன்று (ஏப். 23) பிற்பகல் 12.49 மணியளவில், 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மாகாணத்தில் அமைந்துள்ள மர்மரா கடலுக்கு அருகிலுள்ள சிலிவ்ரி எனும் பகுதியை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிலிருந்து சுமார் 6.92 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக துருக்கியின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால், அப்பகுதிவாசிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதனால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
ஆனால், இந்த நிலநடுக்கத்தினால் அந்நகரத்தில் தொடர்ந்து அதிர்வலைகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, நிலநடுக்கம் அபாயமிகுந்த நாடாக கருதப்படும் துருக்கியில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.