;
Athirady Tamil News

முடியால் பறிபோன இரண்டு உயிர்கள் ; விசாரணையில் வைத்தியர்கள் கொடுத்த அதிர்ச்சி

0

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல் வைத்தியர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் சவுரப் திரிபாதி- அனுஷ்கா திரிவேதி தம்பதியினர். இவர்கள் இருவரும் வைத்தியராக பணிப்புரிந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராவத்பூரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

முடிமாற்று சிகிச்சை
இந்த நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையால் தனது கணவர் வினித் தூபே உயிரிழந்ததாக ஜெயா திரிபாதி என்பவர் முதலமைச்சர் சேவை மையத்தில் ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

புகாரில், “கடந்த மார்ச் 13ஆம் திகதி என் கணவர் முடிமாற்று சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், அடுத்த நாளே அவரது முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாமல், மறுநாளே உயிரிழந்தார்,” என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த தம்பதியின் மீது மீண்டும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் குஷக்ரா கதியார் என்பவர் அளித்த புகாரில், “30 வயதான எனது சகோதரர் மயங்க், கடந்த ஆண்டு நவம்பரில் எம்பையர் கிளினிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்தார். அதே நாளில் ஃபருக்காபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவர், சில மணி நேரத்திலேயே முக வீக்கம் மற்றும் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்,”என கூறியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி, பல் வைத்தியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும் அனுஷ்கா தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அனுஷ்கா நடத்திய வைத்தியசாலை அலுவகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அதன் பெயர்ப்பலகையும் அகற்றப்பட்டுவுள்ளது. இந்நிலையில், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வைத்திய விதிமீறல்கள் தொடர்பாகவும் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.