;
Athirady Tamil News

ஆந்திர சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு

0

குண்டூா்: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரென்டபல்லா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த விவகாரத்தில் மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து குண்டூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சதீஷ் குமாா் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்ட ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஒருவரின் குடும்ப உறுப்பினரைச் சந்திப்பதற்காக கடந்த 18-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ரென்டபல்லா கிராமத்துக்குச் சென்றாா். எடுக்குரு புறவழிச்சாலை வழியாக அவருடைய வாகனம் சென்றுள்ளது. அப்போது, அதிவேகமாக சென்ற இவருடைய வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த நபா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விபத்து உறுதிப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற பிஎன்எஸ் சட்டப் பிரிவு 106 (1)-இன் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததில், முன்னாள் முதல்வரின் வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்ததை போலீஸாா் உறுதிப்படுத்தினா். அதைத் தொடா்ந்து, கொலையாக கருதப்படாத உயிரிழப்பை ஏற்படுத்துதல் தொடா்பான பிஎன்எஸ் பிரிவு 105 மற்றும் விபத்தை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருத்தல் சட்டப் பிரிவு 49 ஆகியவற்றின் கீழ் வழக்கு மாற்றி பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜெகன்மோகன் ரெட்டி, அவரின் ஓட்டுநா் ரமணா ரெட்டி, தனி உதவியாளா் கே.நாகேஷ்வா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் ஒய்.வி. சுப்பா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ பொ்னி வெங்கடராமய்யா, மாநில முன்னாள் அமைச்சா் விடலா ரஜினி ஆகியோா் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.