வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க வெளியுறவு கொளகையில் புதிய திருப்பமாக, வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது Truth Social தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இது சேவைகளுக்கு வரி விதிக்கும் முதல் முயற்சியாகும்.
ட்ரம்ப் மே மாதத்திலேயே இந்த திட்டத்தை முன்வைத்திருந்தார். அவர் கூறியபடி, “மற்ற நாடுகள் வழங்கும் வரிவிலக்கு காரணமாக ஹாலிவுட் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு மாறிவிட்டன. குறிப்பாக கலிபோர்னியா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், வெளிநாடுகளில் படங்களை எடுப்பது குறைந்த செலவாக இருப்பதால், அந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.
அமெரிக்க திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. OTT தளங்கள் வழியாக வீடுகளில் திரைப்படங்களை பார்ப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
2018-ல் 12 பில்லியன் டொலர் வசூலாகியிருந்த நிலையில், 2020-ல் அது 2 பில்லியன் டொலராக குறைந்தது. தற்போது கூட, 2019-ல் வெளியான பாதி அளவிலான திரைப்படங்களே திரையரங்குகளில் வெளியாகின்றன.
திரைப்படங்களுடன் சேர்த்து, ட்ரம்ப் மரப்பொருட்கள், பிராண்டட் மருந்துகள், கனரக லொறிகள் உள்ளிட்டவற்றிற்கும் 25 முதல் 100 சதவீத வரிகள் விதிக்க உள்ளார். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.