உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்!
உக்ரைன் தலைநகரில் ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் கீவில் சனிக்கிழமை(அக். 25) அதிகாலை ரஷிய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கின. அதில் கீவில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்.
ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர்.
ரஷியா மொத்தம் 9 ஏவுகணைகள், 62 ட்ரோன்கள் ஏவியதாகவும், அவற்றுள் 4 ஏவுகணைகளையும் 50 ட்ரோன்களையும் இடைமறித்து அழித்ததாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ரஷிய வான் வழி தாக்குதல்களை எதிர்கொள்ள, உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வான் வழி பாதுகாப்பு அமைப்பை வழங்கிட உக்ரைன் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு – சனிக்கிழமை அதிகாலை வரை, உக்ரைனிலிருந்து ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும், 121 உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.