சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக் குறைவுடன் மீட்பு
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பகாவந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்டில் தனது 6 வயதில் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துள்ளார்.
அப்போது அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் லிசாவை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அவரது பேச்சை கேட்டு மிகவும் பயந்துபோன சிறுமி வீட்டைவிட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் அவரது தாயும் இறந்துவிட்டார். அந்த சிறுமியை பார்த்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனால் அவரது தந்தை லிசாவை அவர்களது மண் குடிசை வீட்டுக்குள் பூட்டிவிட்டு சென்றுவிடுவார்.
அந்த வீட்டில் ஜன்னல் எதுவும் இல்லாததால் இருட்டாகவே இருந்துள்ளது. அவரது தந்தை வீட்டு வாசலில் உணவை மட்டும் வைத்துவிட்டு சென்றுவிடுவார். இப்படியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே லிசா முடங்கி கிடந்துள்ளார். இது அவரது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியை பாதித்து கண் பார்வையையும் பாதித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், அந்த சிறுமியை மீட்டு ஜக்தல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். லிசாவை பெயர் சொல்லி அழைத்தால்கூட அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏதாவது சத்தத்தை கேட்டாலும், யாராவது தொட்டாலும் அவர் பயப்படுகிறார்.
அவரது உடல்நிலையை ஆராய்ந்த மருத்துவக் குழுவினர், அவரால் வெளிச்சத்தை பார்க்க முடியாது. இருளிலேயே அவர் வாழ்ந்ததால் அவரது பார்வை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். அவரது மனவளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிறுமியை போன்றே நடந்து கொள்கிறார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். லிசா தற்போது கராண்டா ஆசிரமத்தில் வசிக்கிறார். அவரை அங்குள்ள பணியாளர்கள் நன்கு கவனித்துக் கொள்கின்றனர்