இன்றைய தினம் (10.02.2026)காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்துப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அழைப்பு விடுத்தார்
அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் உயர்தர மற்றும் சாதாரண தரத்தை சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் வேலைகளுக்கான எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும், ஆனால் மாவட்டத்தில் பல தொழில்தருனர்களிடம் வேலைவாய்ப்பு காணப்படுவதாகவும், மேலும் பல முதலீட்டாளர் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்யவுள்ளதால் வேலைவாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தொழில் தருனர்களுக்கும் வேலையற்றிருப்பவர்களுக்கும் ஒர் இடைவெளி காணப்படுவதாகவும், ஆதலால் வேலையற்றவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இளைஞர் யுவதிகளிடம் தெளிவற்ற அல்லது உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமலிருப்பதாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தொடர்புடைய தரப்பினர் எமது இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வுகளையும் வழங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்டச் செயலகத்தினால் இதற்கான முன்னெடுப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும், அரசாங்க அதிபர் தெரிவித்து அனைவரினதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பங்கெடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் வணிகர் கழகம் மற்றும் கைத்தொழில் மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அரசாங்க அதிபரின் முன்மொழிவிற்கு தமது ஆதரவுகளையும் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தார்கள்.