வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசின் ரகசிய கோப்புகளை வெளியிட டிரம்ப் உத்தரவு
வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) பற்றிய அரசின் ரகசிய கோப்புகள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை அமெரிக்கா இதுவரை உறுதி செய்யவில்லை.
வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசின் ரகசிய கோப்புகளை வெளியிட டிரம்ப் உத்தரவு | Donald Trump Releases Secret Governme Files Aliens
சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, யூடியூபா் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான், ஆனால் நான் இதுவரை பாா்த்ததில்லை என்றாா்.
அமெரிக்க முன்னாள் அதிபா் ஒருவரே, வேற்று கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருப்பது, உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து நீக்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் தெரிவித்திருப்பதாவது,
”மக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வத்தை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள், வேற்றுகிரக வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் விமானங்கள் தொடர்பான அரசின் ரகசிய கோப்புகளை அடையாளம் கண்டு, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.