;
Athirady Tamil News

பிரான்ஸில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி

0

ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது பாடவேளைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் புகழ்பெற்ற திராட்சை வளரும் பகுதியான போர்டோவில் (Bordeaux) வெப்பநிலை 41.9 பாகை செல்சியஸாக (107.4 பாகை பாரன்ஹீட்) உயர்ந்துள்ளது. மத்திய பிரான்சின் பொய்தியே (Poitiers) பகுதியில் வெப்பநிலை 41.2 பாகை செல்சியஸை எட்டியுள்ளது.

இது 1947 ஆம் ஆண்டு பதிவான முந்தைய உச்சகட்ட வெப்பநிலையை விட அதிகமாகும். அதேவேளை, பிரித்தானியாவிலும் இந்த வாரம் ஜூன் மாதத்திற்கான அதிகூடிய வெப்பநிலைப் பதிவுகளை முறியடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஸ்பெயினின் வழக்கமாக குளிர்ச்சியாக இருக்கும் வடக்குப் பகுதியான சான் செபாஸ்டியனில் (San Sebastian), வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜூன் 22 ஆம் திகதிக்கான அந்த நகரின் வரலாற்று ரீதியான சராசரி வெப்பநிலையை விட இருமடங்காகும் என்று ‘ராய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பகம்’ (Reuters Climate Monitor) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி, தனது வரலாற்று ரீதியான வழமையான வெப்பநிலையை விட ஐரோப்பாவே அதிக மாற்றத்தைக் கண்டுள்ள கண்டமாக உள்ளது.

உலக வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, உலகளாவிய வெப்பமடைதல் விகிதத்தை விட ஐரோப்பா இருமடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.