;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கை: மூடப்படும் டஜன் கணக்கான பள்ளிகள்

0

பிரித்தானியாவில் வெப்ப அலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம்(Met Office) தீவிரமான வெப்ப அலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை(Red Warning) வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வெப்ப அலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை லண்டன் முதல் ஸ்வான்சீ பகுதியையும், பர்மிங்காம் முதல் சோமர்செட் பகுதியையும் உள்ளடக்கி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வெப்பநிலையானது 40°C வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எச்சரிக்கை புதன்கிழமை காலை 9 மணி முதல் வியாழக்கிழமை இரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வெப்பம் பொதுமக்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவதோடு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளையும் உருவாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்
வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பல பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின் படி, தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து, லண்டன், கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கான தேசிய சங்கம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.