;
Athirady Tamil News

அதிக புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய புதிய திட்டம்

0

அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிவதற்காக சிறப்பு நிழற்படப் பிரிவொன்றை (Special Photography Unit) அமைப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அதிகாரிகள் ரகசியமாகப் பணியமர்த்தப்படவுள்ளனர்.

அவர்கள் பொது வீதிகளில் அதிக புகையைக் கக்கியபடி பயணிக்கும் வாகனங்களைக் கண்காணித்து நிழற்பட ஆதாரங்களைச் சேகரிப்பார்கள்.

இவ்வாறு பெறப்படும் நிழற்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே வாகனத்தைச் சீரமைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைப் பெறும் வாகன உரிமையாளர்கள், குறித்த காலக்கெடுவிற்குள் தங்களது வாகனங்களைச் சீரமைத்து, வேரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகை பரிசோதனை மையத்திற்கு நேரில் கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறாவிட்டால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் (Data system) அந்த வாகனங்கள் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறுவதிலும், உரிமத்தை வேறு நபருக்கு மாற்றுவதிலும் (Ownership Transfer) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.