;
Athirady Tamil News

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் பெண் கல்வி போராளி மலாலா…!!

0

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.

பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.