ஒமைக்ரான் அச்சம்: கிறிஸ்துமஸ் முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு…!!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால், ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஐரோப்பியாவில் வரும் ஜனவரி மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெல் லேயன் எச்சரித்துள்ளார்.
நெதர்லாந்த் நாட்டிலும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒமைக்ரான் அச்சத்தால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும் என்றும், பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9-ம் தேதி வரை மூடப்படும் என்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாரிகள் விதிவிலக்கு அளித்திருந்தாலும், வீடுகளில் அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையில் கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதா என்பதைப் பொருத்து இரண்டு வார தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.