;
Athirady Tamil News

உக்ரைன் தொடர்ந்த வழக்கு- சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா…!

0

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.

பிரிவினைவாத கிழக்குப் பகுதிகளான லுகான்ஸ்க், டோனட்ஸ்கில் இனப்படுகொலை நடப்பதாக கூறியும், அதற்கு தண்டனை வழங்குவதை நோக்கமாக கொண்டும் பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவிற்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு உக்ரைன் தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை என்ற ரஷியாவின் குற்றச்சாட்டை “கொடூரமான பொய்” என்று உக்ரைன் பிரதிநிதி, சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்தார். “ரஷிய பிரதிநிதிகள் இந்த நீதிமன்றத்தில் இல்லை. அவர்கள் என் நாட்டிற்கு எதிராக ஆக்ரோஷமான போரை நடத்தும் போர்க்களத்தில் உள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வைத்த கோரிக்கை மீது ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரோதப் போக்கை நிறுத்தும்படி ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டால், அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ராணுவ சட்டப் பேராசிரியர் டெரி கில்.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ரஷியா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவிக்கலாம் என்றும் டெரி கில் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.